டெல்லி: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் நியூசி.யிடம் படுதோல்வியை சந்தித்த பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, 2வது ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக வெற்றியை ருசித்தது. அடுத்து ஆப்கானிடமும் அபார வெற்றியை… அதிலும் அதிக ரன் ரேட்டுடன் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இங்கிலாந்து இன்று களம் இறங்குகிறது.
பென் ஸ்டோக்ஸ் விளையாடும் வாய்ப்பு இருந்தால் இங்கிலாந்துக்கு அது கூடுதல் பலமாக இருக்கும். இந்த தொடரில் அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்துள்ள ஷாகிதி தலைமையிலான ஆப்கான் அணி, முதல் வெற்றிக்காக வரிந்துகட்டுகிறது. முதல் ஆட்டத்தில் தட்டு தடுமாறினாலும், 2வது ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 272 ரன் குவித்தது. கேப்டன் ஹஷ்மதுல்லா, உமர்ஸாய் அரைசதம் விளாசினர். அதனால் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானின் கூடுதல் திறமை வெளிப்படலாம். அது இங்கிலாந்தை வெல்ல உதவுமா என்பது கேள்வி. அப்படி வென்றால் ஹாட்ரிக் தோல்வியை ஆப்கான் தவிர்க்கும்.
* இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளதில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது. அந்த 2 ஆட்டங்களும் ஒருநாள் உலக கோப்பைத் தொடர்களில் நடந்த ஆட்டங்கள்.
* 2015 உலக கோப்பையில் 9 விக்கெட் (டிஎல்எஸ் முறை) வித்தியாசத்திலும், 2019 உலக கோப்பையில் 150 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வென்றது.
* டெல்லியில் ஒரு முறை மட்டுமே விளையாடி உள்ள ஆப்கான், கடந்த 11ம் தேதி நடந்த அந்த உலக கோப்பை ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றுள்ளது.
* இங்கு இங்கிலாந்து 4 முறை விளையாடி இலங்கை, இந்தியாவுக்கு எதிராக தலா 1 வெற்றி மற்றும் இந்தியாவிடம் 2 தோல்வி கண்டுள்ளது.
* இந்த அரங்கில் இதுவரை நடந்த 27 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி 13 முறையும், சேஸ் செய்த அணி 14 முறையும் வென்றுள்ளன.