சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பெண்கள் உள்பட 13 பேரும், மற்றொரு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவரும் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிப்பு, விற்பனை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவகாசி அருகே கங்காகுளம் கோபால்நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (43). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எம்.புதுப்பட்டி அருகே ரெங்கபாளையம் பகுதியில் உள்ளது. இந்த ஆலையின் நுழைவு பகுதியில் சுந்தரமூர்த்திக்கு சொந்தமான பட்டாசு கடை, மருந்து சேமிப்பு கிடங்கு உள்ளது. நேற்று பிற்பகல் வெளியூரை சேர்ந்தவர்கள் கடையில் பட்டாசு வாங்க வந்தனர். பேன்சி ரக பட்டாசுகளை கடையின் அருகே வைத்து வெடித்து பார்த்தனர். அப்போது வெடித்து சிதறிய சில பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக கடைக்குள் விழுந்தன. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து நாலாபுறமும் வெடித்துச் சிதறின. இதனால் கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு அந்தப் பகுதியே புகைமண்டலமாக மாறியது. பட்டாசு கடையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி கருகினர்.
தகவலறிந்து சிவகாசி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் கடையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்ததால் அருகே செல்ல முடியவில்லை. பட்டாசுகள் அனைத்தும் வெடித்த பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்தே கடை அருகே தீயணைப்பு வீரர்கள் செல்ல முடிந்தது. கடையின் உள்ளே சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டபோது அங்கு அழகாபுரியை சேர்ந்த மகாதேவி (50), பஞ்சவர்ணம் (35), பாலமுருகன் (30), தமிழ்ச்செல்வி (55), முனீஸ்வரி (32), தங்கமலை (33), அனிதா (40), பாக்கியம் (35), குருவம்மாள் (55), அம்மாபட்டியை சேர்ந்த லட்சுமி (28), இந்திரா (45), மூவரைவென்றான் பகுதியை சேர்ந்த செல்லம்மாள் (40), முத்துலட்சுமி (36) ஆகிய 13 பேர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். சின்னத்தாய் (35), பொன்னுத்தாய் (45) ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், எஸ்பி சீனிவாசபெருமாள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலையில் விபத்து: இதேபோல் சிவகாசி – விருதுநகர் சாலை திருத்தங்கல்பட்டி தெருவை சேர்ந்த முத்துவிஜயனுக்கு சொந்தமான பட்டாசு ஆலை கிச்சநாயக்கன்பட்டியில் உள்ளது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது ஒரு அறையில் திடீரென மருந்து உராய்வு ஏற்பட்டு வெடித்தது. இதில் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நதிக்குடியை சேர்ந்த வேம்பு (60) என்ற தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிந்து பட்டாசு ஆலையின் போர்மேன் கனகராஜை கைது செய்தனர். பட்டாசு ஆலை மற்றும் பட்டாசு கடை உரிமையாளர் சுந்தரமூர்த்தியை தேடி வருகின்றனர். கடந்த 9 மாதங்களில் மட்டும் 25 வெடி விபத்துக்கள் ஏற்பட்டு 39 பேர் பலியாகியுள்ளனர்.
* பின்வாசல் வழியாக தப்பிய தொழிலாளர்கள்
வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு கடையின் அருகில் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டவுடன் ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் பின்வாசல் வழியாக தப்பி ஓடினர். மேலும் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்ததால் பட்டாசு ஆலைக்கு தீ பரவவில்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
* 3 கிலோ மீட்டருக்கு பயங்கர சத்தம்
விபத்து ஏற்பட்டபோது பட்டாசு கடையில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எம்.புதுப்பட்டி, மங்கலம் போன்ற பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். வெடி விபத்து குறித்த தகவல் பரவியதும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். அவர்கள் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.