சென்னை: இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழக உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நேற்று மழை பெய்துள்ளது.
இதற்கிடையே, கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. ஈரோடு, சேலம், திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருப்பத்தூர், திருச்சி மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இலங்கை மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.