காங்கயம், செப்.24: 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்த காங்கயம் பாரதியார் நகர் அரசுப் பள்ளி மாணவிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டி பரிசு வழங்கினார். காங்கயம், பாரதியார் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்த மாணவி சபர்நிகா ஸ்ரீ. இவர், கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் கலந்து கொண்டு, 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்தார்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1330 திருக்குறள் ஒப்புவித்த மாணவி சபர்நிகா க்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டி, சான்றிதழ் மற்றும் ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையையும் வழங்கினார். தற்போது காங்கயத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி சபர்நிகா ஸ்ரீக்கு பாரதியார் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.