விருதுநகர், ஆக.17: சுதந்திர தினத்தன்று விடுமுறை விடாத 131 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி வெளியிட்ட தகவல்: சுதந்திர தினத்தன்று தொழிலாளர் சட்ட விதிகளுக்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 54 கடைகள், நிறுவனங்கள், 64 உணவு நிறுவனங்கள் மற்றும் 13 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 131 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், சுதந்திர தினத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.