சென்னை: 130 கோடி மக்கள் உள்ள நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் தொழில் முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். அப்போது ஆளுநர் ரவி பேசியதாவது; தோல்வியை கண்டு பயப்படாதீர்கள், பாடம் கற்று கொள்ளுங்கள். ஒருமுறை அல்ல இருமுறை அல்ல, நான் பலமுறை தோல்வியை சந்தித்தவன். இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் வேகமாக முன்னேறி வருகிறது.
அதிக தொழில்முனைவோர் கொண்ட எண்ணிக்கையின் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு தொழில் முனைவோரும் இந்த நாட்டின் மிகப்பெரிய சொத்து. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றில் பெரும் வளர்ச்சியை பெற்றாலும் வறுமை, வேலைவாய்ப்பின்மை, இறப்பு விகிதம் அதிகரிப்பு என சவாலாக உள்ளது. 130 கோடி மக்கள் உள்ள நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது.
நாடு வளர்ச்சியடைய வேண்டும் எனில் ஒவ்வொரு மனிதரும் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். மேலும், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு பயணிப்போம். ஆளுநருக்கு அதிக வேலைகள் இருக்கும் என மக்கள் முன் மாயை உள்ளது, ஆனால் எனக்கு அதிக வேலைகள் இல்லை. நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன். என்று தெரிவித்தார்.