புதுச்சேரி, ஜூலை 10: புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பல் கூறியதை நம்பி 13 பேர் ரூ.95.29 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த வெங்கடேசனுக்கு, அவரது நண்பர் ஆன்லைன் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஒரு வர்த்தக இணையதளத்தை பரிந்துரைத்துள்ளார். அதில் அவரும் பல பரிவர்த்தனைகளாக ரூ.92 லட்சம் முதலீடு செய்துள்ளார். பிறகு, சம்பாதித்த தொகையை எடுக்க முடியாமல் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
பனித்திட்டை சேர்ந்த அஸ்வினி என்பவருக்கு தெரியாத நபர் போன் செய்து நிதிநிறுவன ஊழியர் போல் பேசியுள்ளார். அப்போது, குறைந்த வட்டிக்கு ரூ.5 லட்சம் வரை கடன் தருவதாகவும், இதற்கு செயலாக்க கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை உண்மையென நம்பி அவரும் தெரியாத நபருக்கு ரூ.1.49 லட்சத்தை அனுப்பி ஏமாந்துள்ளார். காமராஜ் நகரை சேர்ந்த ஜெயந்த் என்பவருக்கு ஆன்லைனில் திருப்பதி டூர் பேக்கேஜ் தேடியுள்ளார். பிறகு, ஆன்லைனில் கிடைத்த தெரியாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தெரியாத நபர் டூர் பேக்கேஜ் முன்பதிவுக்காக ரூ.25 ஆயிரம் பெற்று ஏமாற்றியுள்ளார்.
அரியாங்குப்பத்தை சேர்ந்த இளம்பரிதி என்பவர் பேஸ்புக்கில் குறைந்த விலைக்கு ஏசி விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். உடனே அவர் ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏசியை ஆர்டர் செய்துள்ளார். பல நாட்கள் கடந்த பிறகும் ஏசி வராமல் ஏமாந்துள்ளார். கோரிமேட்டை சேர்ந்த இருதயராஜ் சார்லஸ் என்பவருக்கு வங்கியில் இருந்து அனுப்பியதுபோல் ஒரு லிங்க் மெசேஜ் வந்துள்ளது. இதை அவரும் உண்மையென நம்பி, லிங்க் மெசேஜ் வழியாக சென்று பயனாளர் ஐடி, கடவுச்சொல், வங்கி விவரம் உள்ளிட்டவற்றை பதிவு செய்துள்ளார். அதன்பிறகு, அவரது கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து மோசடியாக ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் உட்பட மொத்தம் 13 பேர் ஆன்லைன் மோசடி கும்பல் கூறியதை நம்பி ரூ.95.29 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.