ஊட்டி, செப் 14: தேயிலைக்கு உரிய விலை வழங்கக்கோரி 13வது நாளாக நீலகிரியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில், குந்தை சப்பையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய விலை வழங்க கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாக்குபெட்டா படுகர் நலச்சங்கம் சார்பில் நாள் தோறும் உண்ணாவிரத போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று குந்தை சப்பையில் பகுதியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாக்கு பெட்டா படுகர் நல சங்க தலைவர் பாபு தலைமை வகித்தார். குந்தை சப்பை ஊர் தலைவர் நடராஜ் மற்றும் 11 ஊர் துணைத் தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர் நீதிமன்றம் பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்க கோரி வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டும். பசுந்தேயிலை கிலோ ஒன்றிற்கு ரூ.35 வழங்கிட வேண்டும். தேயிலை சட்டத்தின் 30வது பிரிவை அனைத்து தரப்பிருக்கும் நடைமுடைறப்படுத்த வேண்டும். நீலகிரி மாவடட்ட சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நலனை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டனர். இதில், ஏராளமான பெண்கள் உட்பட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.