தூத்துக்குடி: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர். தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரின் விசைப்படகில் வேம்பாரைச் சேர்ந்த அதிசய பரலோக திரவியம், அந்தோணி செல்வசேகரன் பரலோக பிரான்சிஸ், அந்தோணி அன்சல் கிறிஸ்டோபர், சிலுவைப்பட்டியை சேர்ந்த அன்பு சூசைமிக்கேல், தருவைகுளத்தை சேர்ந்த மைக்கேல்ராஜ், மகேஷ்குமார் பரமசிவம், ஆதிநாராயணன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணி, சக்தி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த உதயகுமார், விக்னேஷ், மதுரையைச் சேர்ந்த மாதேஷ்குமார் துரைப்பாண்டி ஆகிய 12 பேரும் கடந்த 1ம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் மீன்பிடித்துவிட்டு கடந்த 23ம் தேதி மாலத்தீவு கடல் பகுதி வழியாக கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர், மாலத்தீவு கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி, இவர்கள் 12 பேரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக மாலத்தீவு கடற்படையினர் மூலம் தருவைகுளம் மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை ஒன்றிய, மாநில அரசுகள் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களின் குடும்பத்தினர் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.