டாக்கா: வங்கதேசத்தில் உள்ள துறைமுக நகரான சட்டோகிராமில் ஏராளமான இந்துக்கள் வசிக்கின்றனர். இங்கு உள்ள ஹசாரி கலி பகுதியில் நகைகடைகள், மருந்து கடைகளை அவர்கள் நடத்தி வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த உஸ்மான் அலி என்ற வர்த்தகர் இஸ்கான் அமைப்புக்கு தீவிரவாதத்துடன் தொடர்பு என்று சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதை கண்டித்து நேற்று முன்தினம் இரவு கடைக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வங்கதேச ராணுவம், எல்லை பாதுகாப்பு படை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சிலர் ஆசிட் மற்றும் கண்ணாடி துண்டுகளை வீசியுள்ளனர். இதில்,5 ராணுவ வீரர்கள்,7 போலீசார் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 80 பேரை ராணுவத்தினர் பிடித்து விசாரிக்கின்றனர்.


