லக்னோ: ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப், அரியானா, உ.பி.யில் இதுவரை 12 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபரேஷன் சிந்தூார் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்களை குறிவைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து ஒரு யூடியூபர் உட்பட இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வட இந்தியாவில் செயல்படும் பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததாக விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 பேரில் 6 பேர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்தும், 4 பேர் அரியானாவில் இருந்தும், ஒரு வர் உபியில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 4 ஆம் தேதி, பஞ்சாப் காவல்துறை அமிர்தசரஸில் உள்ள அஜ்னாலாவைச் சேர்ந்த பலக்ஷேர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகியோரை கைது செய்தனர். அமிர்தரசரஸ் மாவட்டத்தில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் பகுதிகள் மற்றும் விமான தளங்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை ஐஎஸ்ஐக்கு கசியவிட்டதாகக் கூறி கைது செய்தது. இருவரும் ராணுவத்தின் நடமாட்டங்கள், பிஎஸ்எப் முகாம்கள் மற்றும் விமான நிலையங்களின் இருப்பிடங்கள், புகைப்படங்கள் மற்றும் பிற முக்கியமான தரவுகள் போன்ற முக்கியமான தகவல்களை பாகிஸ்தானில் உள்ள உளவு அமைப்புகளுக்கு சேகரித்து அனுப்புவதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மே 11 ஆம் தேதி டெல்லியில் உள்ள பாக். உயர் தூதரகத்தில் நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் அதிகாரி இஷான் உர் ரஹிம் என்கிற டேனிஷுடன் தொடர்புடைய உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஒரு பெண் உட்பட மேலும் இரண்டு பேர் பஞ்சாப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 31 வயதான குசாலா மற்றும் யமீன் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மலேர்கோட்லாவைச் சேர்ந்தவர்கள். ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பணம் பெற்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட குசாலா, இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்த ரகசியத் தகவலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் அதிகாரி டேனிஷிடம் பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொண்டார்.
இதற்காக பாக். தூதரக அதிகாரி டேனிஷ் யுபிஐ மூலம் ரூ.10,000 மற்றும் ரூ.20,000 என இரண்டு பரிவர்த்தனைகளில் ரூ.30,000 அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். மே 15 அன்று ஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் சுக்ப்ரீத் சிங், கரன்பீர் சிங் என 2 பேர் கைதாகி உள்ளனர். இது குறித்து காவல்துறை டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில், ‘‘கைதான 2 பேரின் செல்போன்களை தடவியல் சோதனை செய்ததில், முக்கிய ராணுவ தகவல்களை அவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு அனுப்பியது உறுதியாகி உள்ளது. கைதானவர்கள் ஐஎஸ்ஐ நபர்களுடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளனர்’’ என்றார். மே 15 அன்று, பாகிஸ்தானில் உள்ள சில நபர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியதாகக் கூறி அரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான நவ்மன் இலாஹி என்பவரை காவல்துறை கைது செய்தது.
உத்தரபிரதேசத்தின் கைரானாவைச் சேர்ந்த நவ்மன் இலாஹி பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐஎஸ்ஐ கையாளுபவருடனும் தொடர்பில் இருந்தார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நவ்மன் இலாஹி ஒரு தொழிற்சாலை பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். மேலும் பாகிஸ்தானுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் பானிபட்டில் உள்ள ஹாலி காலனியில் தனது சகோதரி மற்றும் மைத்துனருடன் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார். மே 16 அன்று அரியானா மாநிலம் கைத்தல் மாவட்டம் குஹ்லா பகுதியை சேர்ந்த 25 வயது அரசியல் அறிவியல் முதுகலை மாணவர் தேவேந்தர் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த நவம்பர் மாதம் புனித யாத்திரைக்காக பாக். சென்ற அவர் அங்கு பாக். உளவு அமைப்புகளை தொடர்பு கொண்டுள்ளார்.
இந்தியா வந்த பிறகு பாட்டியாலா கண்டோன்மென்ட் உள்ளிட்ட சில புகைப்படங்களை எடுத்து அனுப்பியதும், இந்தியாவின் ஆயுத விவரங்களை சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பதிவேற்றியதற்காக கைது செய்யப்பட்டார்.
மே 16 அன்று அரியானா காவல்துறை ஹிசாரைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை அதிரடியாக கைது செய்தது. ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா, ஹிசாரில் உள்ள நியூ அகர்செய்ன் எக்ஸ்டென்ஷனில் கைது செய்யப்பட்டார். அவர் மீது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் முறையே 3.77 லட்சம் சந்தாதாரர்களையும் 1.33 லட்சம் பின்தொடர்பவர்களையும் கொண்ட ஜோதி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர் டேனிஷுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவரது யூடியூப் சேனல் கணக்கில், பாகிஸ்தான் பயணம் குறித்த சில வீடியோக்கள் உள்ள. ‘பாகிஸ்தானில் இந்தியப் பெண்’, ‘லாகூரைச் சுற்றியுள்ள இந்தியப் பெண்’, ‘கட்டஸ் ராஜ் கோவிலில் இந்தியப் பெண்’, ‘பாகிஸ்தானில் சொகுசுப் பேருந்தில் இந்தியப் பெண் சவாரி’ என்ற பெயரில் அவர் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மே 18 அன்று பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக அரியானாவின் நூஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது வாலிபர் அர்மான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானுக்கான உளவு பார்த்ததாகவும், டெல்லியில் உள்ள பாக். ஊழியருடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதே போல் நூஹ் மாவட்டத்தில் உள்ள கங்கர்கா கிராமத்தை சேர்ந்த முகமது தாரீப் என்பவரை மத்திய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. இவர் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முக்கியமான தகவல்களை நீண்ட காலமாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள ஒரு ஊழியருக்கு சிம் கார்டு கொடுத்ததாகவும், பாகிஸ்தானுக்கு சென்றதாகவும் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். முகமது தாரீப் மற்றும் டெல்லியில் பாகிஸ்தான் தூதகரத்தில் பணியாற்றும் ஆசிப் பலோச் மற்றும் ஜாபர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 18 அன்று உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் இருந்து ஷாஜாத் என்ற தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை ஷாஜாத் பாக். உளவு பிரிவுக்கு அனுப்பியதாகக் கூறப்படுவதாக சிறப்புப் படை தெரிவித்துள்ளது. அவர் பாகிஸ்தானுக்கு பல முறை பயணம் செய்து, அழகுசாதனப் பொருட்கள், உடைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை எல்லை வழியாக கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் மீது உளவு பார்த்தல் தொடர்பான பிரிவுகள் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாக். அதிகாரி வெளியேற்றம் ஏன்?
இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த போர் நிறுத்தப்பட்ட பிறகு 3 நாட்கள் கழித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்ற அதிகாரி திடீரென வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து தான் பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் தான் விசாவுக்கு சென்ற ஜோதியிடம், முதல் சந்திப்பிலேயே அதிகாரி டேனிஷ் நெருக்கமாக பழகியதும், செல்போன் எண்களை பறிமாறிக்கொண்டதும் தெரிய வந்தது.
மேலும் 2 ஆண்டுகளுக்கு முன்பு பாக். சென்ற ஜோதி தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டேனிஷின் கூட்டாளியான அலி அஹ்வான் செய்து கொடுத்ததுடன், பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். பாக். உளவு அதிகாரிகள் ஷாகிர் மற்றும் ராணா ஷாபாஸ் ஆகியோருக்கு இந்தியாவுக்குத் திரும்பி வந்ததும் வாட்ஸ்அப், ஸ்னாப்சாட் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்கள் மூலம் அவர்கள் கேட்ட தகவல்களை அனுப்பி வைத்துள்ளார். ஜோதி மற்றும் பல இந்தியர்களை பாக்.கிற்கு உளவு பார்க்க பயன்படுத்திய காரணத்தால் தான் பாக். அதிகாரி டேனிஷ் வெளியேற்றப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.
அவர் உளவாளி இல்ல… வெறும் துணி வியாபாரி…
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்த ராம்பூர் தொழில் அதிபர் ஷாஜாத்தின் குடும்பத்தினர், அவர் நிரபராதி, பாக்கில் துணி வியாபாரத்தில் மட்டுமே ஈடுபட்டவர் என்று தெரிவித்தனர். அவரது மனைவி ரசியா கூறுகையில்,’அவர் குற்றமற்றவர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவரை காரணமின்றி குற்றவாளி என்று கூறுகிறார்கள். அவரை விடுவிக்க விரும்புகிறேன். எங்கள் குழந்தைக்கும், எனக்கும் எந்த ஆதரவும் இல்லை. பாக்கில் ஆடை வாங்க ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே சென்றார். அவருக்கும் ஐஎஸ்ஐக்கும் இடையே எந்த தொடர்பும் இருப்பதாக எனக்கு தெரியாது’ என்றார். ஷாஜாத்தின் தாயார் நூர் ஜஹான் கூறுகையில்,’ எனது மகன் மூன்று அல்லது நான்கு முறை லாகூருக்குச் சென்றிருக்கலாம். எப்போதும் முறையான விசாவில் தான் சென்று வந்துள்ளார்’ என்றார்.