*412 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு
ஊட்டி: சென்னையில் துவங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதலீட்டு இலக்காக ரூ.150 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.128.11 கோடிக்கான 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறி கொள்ளப்பட்டன. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களின் முதலீடுகளை பெற்று புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தொழிற் துறை சார்ந்து பல்வேறு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு தொழிற்துறையின் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று துவங்கியது. இம்மாநாடு இரு நாட்கள் நடக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும். இம்மாநாடு நேற்று துவங்கியதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இவற்றை நேரடியாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் அலுவலர்கள் பார்வையிட்டனர். இதேபோல் ஊட்டி அரசு கலை கல்லூரி, எமரால்டு ஹைட்ஸ் கல்லூரி, சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளிலும், குன்னூர் ஐடிஐ, ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, யூனிக் பப்ளிக் பள்ளி, ஜேஎஸ்எஸ் கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
மாவட்டத்திற்கு குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதலீட்டுக்கான இலக்காக ரூ.150 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.128.11 கோடிக்கான 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறி கொள்ளப்பட்டன. இதன் மூலம் 412 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் குன்னூர் பஸ் நிலைய பகுதியில் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் முதலீட்டாளர்கள் மாநாடு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இவற்றை தொழில் முனைவோர்கள், பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள், ஓட்டல்கள் சங்க நிர்வாகிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பார்வையிட்டனர்.