மதுரை: கடந்த 50 நாட்களில் மதுரை மாநகரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 126 ரவுடிகளை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில், குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இருசக்கர வாகனம் ரோந்துகளை இயக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த் அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் மதுரையில் அலங்காநல்லூர் போலீஸ் சரகம், நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலைய சரகம் போன்ற முக்கிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசார் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று சட்ட விரோத செயல்கள் பற்றியும், சமூக விரோதிகளின் நடமாட்டம் பற்றியும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 50 நாட்களில் மதுரை மாநகரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 126 ரவுடிகளை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 30 வயதிற்கு கீழுள்ள இளைஞர்கள் 100 பேரும், 30 வயதுக்கு மேற்பட்ட 16 பேரும் அடங்குவர். வழிப்பறி நோக்கத்தோடு கத்தியுடன் சுற்றி திரிந்தது, வணிகர்களை மிரட்டி மாமுல் கேட்டது போன்ற குற்றங்கள் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.