கொடைக்கானல்: ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ராமாராவ் (60). தொழிலதிபரான, இவர் கடந்த 37 ஆண்டுகளாக கொடைக்கானலில் தங்கி நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிளாவரை பகுதியில் உள்ள அக்கறை காட்டில் உள்ளது. இங்கு விவசாயம் செய்து வந்தார். கடந்த 2020ல் ராமாராவின் மாமனார் உடல் நலமில்லாமல் போனதால், இவர் குடும்பத்துடன் ஆந்திரா செல்லும் சூழல் ஏற்பட்டது. அப்போது கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த விஜயகுமாரிடம், 120 ஏக்கர் நிலத்தை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்குமாறு கூறியுள்ளார்.
இதை பயன்படுத்தி அவர், நண்பர் ரகுவுடன் சேர்ந்து ராமாராவ் நிலத்தில் மகசூலை விற்றதோடு, அனுமதியின்றி விவசாயம் செய்து வந்துள்ளார். இதனையறிந்த ராமாராவ் கடந்த ஏப்ரலில் கொடைக்கானலுக்கு வந்து, தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், ரகு, பாஜ பிரமுகர் பிரபுதேவா மற்றும் சிலர், அவரை தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து ராமாராவ் புகாரின்படி கொடைக்கானல் போலீசார் கடந்த செப்.16ம் தேதி வழக்குப்பதிந்து ராமாராவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்ற விஜயகுமார், ரகு, பாஜ பிரமுகர் பிரபுதேவா ஆகியோரை கைது செய்தனர். உடந்தையாக இருந்த மேலும் சிலரை தேடி வருகின்றனர்.