ஈரோடு: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் 12 ஆயிரம் பில்லிங் மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறினார். ஈரோட்டில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் விற்பனையை உயர்த்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று எங்கும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஒரு கடையின் சராசரி விற்பனையில் 10 சதவீதம் குறைவாக விற்பனையானால் அந்த பகுதியில் ஏதாவது சட்ட விரோத விற்பனை நடைபெறுகிறதா? என்று கண்காணிக்கப்படுவதற்கான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுகின்றது.
விற்பனையை ஈடுகட்ட வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. மது பழக்கத்தில் இருந்து ஒருவர் விடுபட்டு அதன் மூலம் விற்பனை குறைந்தால் இந்த அரசு மகிழ்ச்சியடையும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்த காரணத்தால் 46 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க 12 ஆயிரம் பில்லிங் மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் பில்லிங் மெஷின் வைக்கப்பட்டு விட்டால் கூடுதல் விலைக்கு விற்பது முற்றிலும் தடுக்கப்படும். விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும். சம்பள உயர்வு தொடர்பாக டாஸ்மாக் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் பேமண்ட் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.