நெல்லை : நெல்லை சந்திப்பு பெரியார் பஸ்நிலையம் அருகே அரசு பஸ் தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் லேசான காயமடைந்தனர்.தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர்.
இந்த பஸ் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இறங்கி நெல்லை சந்திப்பு பெரியார் பஸ் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அங்கும் இங்குமாக தாறுமாறாக ஓடியது.
அதே நேரத்தில் அந்த பஸ்சுக்கு முன்னால் அதே சாலையில் சென்னல்பட்டியில் இருந்து சுமார் 25 பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சின் பின்புற பகுதியில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பின்புற கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்தது. மேலும் புளியங்குடியில் இருந்து வந்த அரசு பஸ்சின் முன் பகுதியும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் சென்னல்பட்டியில் இருந்து வந்த அரசு பஸ்சில் பயணம் செய்த 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.