திருவாரூர், ஆக. 26: திருவாரூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தாட்கோ திட்டத்தில் 4 ஆண்டு பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி) மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்படவுள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகமானது உலகிலேயே முதல் முறையாக இளங்கலை தரவு அறிவியல் மற்றும் மிண்ணணு அமைப்புகள் பட்டப்படிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதில் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (டிப்ளமோ) முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து 4 ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். அதன்படி, நடப்பாண்டு வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் மூலம் நடத்தப்படும் நுழைவுதேர்வில் (ஜெ.இ.இ) பங்குபெற தேவையில்லை. அதற்கு பதிலாக 12ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் இணையான படிப்பு முடித்த மாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வாரபயிற்சியின் முடிவில் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
மேலும் இத்திட்டத்தில் பயில அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன மற்றும் மாணவர்கள் ஒரு அடிப்படைச்சான்றிதழ், ஒன்று அல்லது 2 டிப்ளமோக்கள் அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம். இவ்வகுப்புகள் இணையதளம் வழியாக நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை (டிகிரிகோர்ஸ்) படித்துக் கொண்டே இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி) வழங்கும் பேச்சலர் ஆப் சைன்ஸ் இன் டேட்டாசைன்ஸ் அன்ட் அப்ளிகேசன்ஸ், பேச்சலர் ஆப் சைன்ஸ் இன் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் இதில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படிக்கலாம். தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளது. இத்திட்டத்தில் முறையாக 4 வருடம் பேச்சலர் ஆப் சைன்ஸ் இன் டேட்டாசைன்ஸ் அன்ட் அப்ளிகேசன்ஸ் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி)யில் நேரடியாக படிப்பதற்கான கேட் எக்ஸாம் எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களாக இருக்கவேண்டும். மாணவர்கள் தங்களது 12ம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 60 சதவிகித்திற்கு மேல் தேர்ச்சிபெற்றவராக இருக்கவேண்டும். 10ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணிதபாடத்தில் 60 சதவிகித்திற்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தாட்கோவில் பதிவு செய்த மாணவர்கள் இந்தியதொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி.) நடத்தும் தகுதிதேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். டேட்டாசைன்ஸ் அன்ட் அப்ளிகேசன்ஸ் தேர்வு கட்டணம் ரூ.1,500 -மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் தேர்வு கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆகும். எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்டமேலாளர் அலுவலகத்தை நேரிலும், 04366-250017 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.