கலாபுராகி: தேசிய ஜனநாயக கூட்டணியின் 11 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி 33 தவறுகளை செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம் கல்புர்கியில் செய்தியாளர்களை சந்தித்த கார்கே, ‘‘ தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 11 ஆண்டுகால ஆட்சியில் 33 தவறுகள் நடந்துள்ளன. இத்தனை பொய் கூறும், இவ்வளவு தவறுகளை செய்யும், மக்களை சிக்க வைக்கும், இளைஞர்களை ஏமாற்றும், ஏழைகளை சிக்க வைத்து வாக்குகளை பெறும் ஒரு பிரதமரை நான் பார்த்தது கிடையாது. நான் 55 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறேன்.
65 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆனால் பிரதமரை போல ஒருவரை நான் பார்த்தது கிடையாது. பிரதமர் எல்லாவற்றுக்கும் பொய் கூறுகிறார். அவர் கூறும் எதையும் அவர் செயல்படுத்துவது இல்லை. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவரிடம் எந்த பதிலும் இல்லை. பணமதிப்பிழப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலை என பல விஷயங்கள் உள்ளன. ஆனால் மக்களிடம் பொய் சொன்னதாகவும், தவறு செய்ததாகவும் அவர் ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை. அதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் ஒன்றன்பின் ஒன்றாக பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இப்போது 11 ஆண்டுகள் ஆகின்றது’ என்றார்.