பெங்களூரு: பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேர் குடும்பத்துக்கு இழப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 3-ம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, மறுநாள் (ஜூன் 4) பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோப்பையை வென்ற அணி வீரர்களைக் காண பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்துக்கு ஏராளமானோர் குவிந்தனர்.
இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு கா்நாடக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது; நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இறந்தவா்களின் குடும்பத்துக்கான நிவாரணத் தொகை தலா ரூ. 25 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுமென்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.