சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவருக்கு மாதேஷ்(16) என்ற மகன் உள்ளான். இவன் ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளியில் நடந்த மாத பருவத்தேர்வில் 2 பாடங்களில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்களுக்கு பயந்து கடந்த 26ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதாக சீருடையில் வீட்டில் இருந்து புறப்பட்டு, பள்ளிக்கு செல்லாமல் ஆற்காடு பகுதியில் இருந்து சென்னைக்கு பேருந்து மூலம் வந்துள்ளான். பள்ளிக்கு சென்ற மகன் இரவு வரை வீடு திரும்பாததால் சம்பவம் குறித்து அவனது பெற்றோர் திரிமி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் மாணவனின் புகைப்படத்தை வைத்து தேடி வந்தனர்.
இதற்கிடையே கோயம்பேடு போலீசார் மாணவன் ஒருவன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பள்ளி சீருடையில் சுற்றி வருவதை பார்த்து அவனை மீட்டு விசாரித்துள்ளனர். அந்த மாணவன் மாதேஷ் என தெரியவந்தது. சிறுவன் அளித்த தகவலின்படி போலீசார், திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், பெற்றோர் வரும் வரையில் போலீசார் காவல் கரங்கள் உதவியுடன் வில்லிவாக்கம் சிறுவர் காப்பகத்தில் சேர்த்தனர். அதை தொடர்ந்து திமிரி போலீசார் மற்றும் சிறுவன் தந்தை அர்ச்சுனன் நேற்றுமுன்தினம் சென்னை வந்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் காவல் கரங்கள் அதிகாரிகள் மகனை ஒப்படைத்தனர்.