டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 2026ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரியிலும், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும். மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நடைமுறை இருக்கும் என்று சிபிஎஸ்இ தேர்வுக்கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். 2ம் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் விருப்பம் இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்வில் மதிப்பெண் போதவில்லை எனக் கருதினால் 2ம் கட்ட தேர்வை எழுதலாம். கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றில் ஏதெனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில் உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமுறை தேர்வு எழுதியவர்களில் அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.