திருமலை: தொடர் மழையால் ஆந்திரா வெள்ளக்காடான நிலையில், விஜயவாடா நகரின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜேசிபியில் சென்று வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்கள் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெரும் மழை கொட்டி தீர்த்துள்ளதால், ஆந்திராவில் உள்ள ஆறுகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியில் மட்டும் விநாடிக்கு 10 லட்சம் கனஅடி வெள்ளம் கரையை தாண்டி ஓடுகிறது. இதனால், அதன் கரையோர பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக என்டிஆர் மாவட்ட தலைநகரான விஜயவாடா நகரத்தையொட்டி கிருஷ்ணா நதியும், பூதமேறு ஆறும் ஓடுகிறது.
இந்த இரு ஆறுகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விஜயவாடா நகரின் பெரும் பகுதியில் 3வது நாளாக நேற்றும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நகரின் 50 சதவீத பகுதிகள் பல அடி வெள்ள நீரில் மூழ்கிக்கிடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை படகிலும், ஜேசிபியிலும் சென்று பார்வையிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு என்டிஆர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சகஜ நிலைக்கு திரும்பும் வரை இங்கேயே இருப்பேன். அனைத்து துறை செயலாளர்களும் இங்கே இருந்து பணி புரிவார்கள். கிருஷ்ணா நதியில் எதிர்பாராதவிதமாக வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. சமீப காலத்தில் இவ்வளவு மழை பெய்ததில்லை. விஜயவாடா சிங் நகரில் உள்ள 16 வார்டுகள் கடும் நெருக்கடியில் உள்ளன. கடந்த அரசாங்கத்தின் தவறுகளால் இந்த தர்மசங்கடமான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது.
நானே நேரில் படகில் சென்று பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை பார்த்தேன். மத்திய அரசிடம் கேட்டவுடனே உதவ ஒப்புக்கொண்டு 10 தேசிய பேரிடர் குழுக்களுடன் 6 ஹெலிகாப்டர்கள், 40 படகுகள் வரவுள்ளன. கடந்த காலங்களில் பல புயல்களை திறம்பட எதிர்கொண்டோம். இந்த மழைக்கு லட்சக்கணக்கான குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரை இரவு பகலாக உழைப்போம். சிறப்பான செயல்திட்டத்துடன் முன்னோக்கி செல்வோம். மக்கள் படும் கஷ்டங்களைப் பார்த்ததும் வீட்டுக்குப் போக மனமில்லை. எனவே இரண்டு நாட்கள் கலெக்டர் அலுவலகத்திலேயே தங்கி நிலைமை அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மறுவாழ்வு மையங்களுக்கு மாற்றப்படுவார்கள். ஓட்டல்கள், மறுவாழ்வு மையங்கள், சமூகக் கூடங்களில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்து சகஜ நிலை திரும்பிய பிறகே வீட்டுக்கு செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து முதல்வருக்கான கேரவன் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு இரவு அதில் தங்கினார். கலெக்டர் அலுவலகமே தற்காலிக முதல்வர் முகாம் அலுவலகமாக மாறியுள்ளது. இதனால் அதிகாரிகளும் கலெக்டர் அலுவலகத்தில் தங்கியிருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை மீண்டும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து படகு மூலம் அனைவரும் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், பால், பிரட் போன்றவரை வழங்கப்பட்டு வருகிறது.