ஆந்திரா: 10 மணி நேர விசாரணைக்கு பின் நீதிபதி இல்லத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆஜரானார். திறன் மேம்பாட்டு பயிற்சி என்ற பெயரில் ரூ.241 கோடி முறைகேடு செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றசாட்டு வைத்துள்ளனர். திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் நேற்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை சிஐடி கைது செய்தது. ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில் ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நந்தியாலாவில் அவர் பேருந்தில் இருந்த போது போலீசார் வந்துள்ளனர். காலை 6 மணியளவில், அவர்கள் சந்திரபாபு நாயுடுவை பேருந்தில் இருந்து வெளியே அழைத்து, கைது நோட்டீஸ் கொடுத்தனர்.
அப்போது, சந்திரபாபு தரப்பு வழக்கறிஞர்களும், கட்சித் தலைவர்களும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 50(1)(2) பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சந்திரபாபுவை எப்படி கைது செய்யலாம் என்று கூறி அவரது வழக்கறிஞர்கள் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது அனைத்து விவரங்களையும் தெரிவிப்பதாக சந்திரபாபுவிடம் போலீசார் தெரிவித்தனர்.
டிஐஜி ரகுராமி ரெட்டி தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து, முதலில் முகாமில் இருந்து ஆர்வலர்கள் மற்றும் தலைவர்களை வெளியேற்றியது. சந்திரபாபுவுக்கு அளிக்கப்பட்ட சிஆர்பிசி நோட்டீசில், குற்ற எண். 29/2021 இன் கீழ் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஐபிசி 120பி மற்றும் 420 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.