சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 4 கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார். ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் மற்றும் முதல்வரின் செயலாளர்களை சந்தித்து, பழைய ஓய்வூதியத்தை வழங்க கோரியும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்.
இதை தொடர்ந்து ஜாக்டோ -ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலின் போது ஜாக்டோ -ஜியோ நடத்திய மாநாட்டில் முதல்வர் கலந்துகொண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் திமுக ஆட்சி அமைத்த பிறகு ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதேபோன்று, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆட்சியில் 2020ம் மார்ச் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்ட ஊக்க உயர்வு அரசு பொறுப்பேற்றவுடன் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் அதையும் தற்போது வரையிலும் வழங்கவில்லை. ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை, தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு எல்லாம் ஊதிய முரண்பாடுகள் இருக்கிறது.
இதை அனைத்தையும் சரி செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து நான்கு கட்டமாக ஜாக்டோ -ஜியோ அமைப்பின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். அதன்படி வரும் 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இரண்டாவது கட்டமாக நவம்பர் 15ம் தேதி முதல் நவம்பர் 24ம் தேதி வரை ஆசிரியர், அரசு ஊழியர் தொடர் போராட்ட பிரசார இயக்கம், மூன்றாவது கட்டமாக நவம்பர் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம், நான்காவது கட்டமாக டிசம்பர் 28ம் தேதி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.