புதுடெல்லி: பீகாரில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஒரே மாதத்தில் 10 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கறிஞர் பிரஜேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘இந்தியாவிலேயே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் பீகார். இந்த நிலையில், பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் மிகவும் பேரழிவை ஏற்படுத்துகிறது. மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே மாநிலம் முழுவதும் உள்ள பாலங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி பாலங்கள் இருக்கிறதா என அவற்றின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு நடத்த வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரித்து பீகார் அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது.
10 பாலங்கள் இடிந்த விவகாரம் பீகார் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
48