சிவகங்கை, மே 28: சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக 108ஆம்புலன்ஸ் மற்றும் தாய் சேய் நல ஊர்தி ஓட்டுநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் மொத்தம் 31 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 3தாய் சேய் நல ஊர்திகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 90பேர் ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்றனர். அவசரகால ஓட்டுநர் தினந்தோறும் கையாளும் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி சிறப்பாக பணியாற்றியதற்காக ரகுராம் மற்றும் கார்த்திக்ரஜா ஆகியோர் சிறந்த அவசர கால ஓட்டுநராக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தாய் சேய் நல ஊர்தி ஓட்டுநர் பூபதியும் சிறந்த பணிக்காக தேர்வு செய்யப்பட்டார். மூவருக்கும் கலெக்டர் ஆஷாஅஜித் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுந்தர்ராஜன், தாய் சேய நல ஊர்தி ஒருங்கிணைப்பாளர் கைசர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.