சென்னை: ஜூன் 3ம் நாள் இன்றைய திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கலைஞர். பள்ளி பருவத்திலேயே முரசொலி கையெழுத்து ஏடாகவும், பின்னர் மாத வார ஏடாகவும், நாளேடாகவும் வளர்ந்து இன்றும் பத்திரிகை உலகில் ஓர் சிறந்த ஆயுதமாக பயன்படுகிறது. கலைஞர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை சந்தித்தபின், அவர்களுடைய கொள்கைகளை இதயத்தில் ஏந்தி, அவற்றை தம்வாழ் நாள் முழுவதும் பரப்பி அவ்வழியில் இறுதிவரை வாழ்ந்தவர்.
1957ம் ஆண்டு குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, 2016ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தவர். அண்ணாவின் மறைவுக்கு பின்பு, 1969ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, 1971, 1989, 1996, 2006ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றி பல எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கிச் சிறப்பு செய்தவர்.
தனது வாழ்க்கை வரலாற்றை தமிழக மக்கள் அறியும் வகையில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் முரசொலி மற்றும் குங்குமம் இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர், அவை ‘நெஞ்சுக்கு நீதி’ ஆறு பாகங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது. இவையனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. கலைஞர் வாழும்போது வரலாறாகவும், மறைந்தும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நிலைத்து வாழ்கின்ற அவரது புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையிலும், கலைஞர் பிறந்த ஜூன் 3ம் நாள் ‘செம்மொழி நாள்’ என தமிழ்நாடு அரசினால் அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளது.
கலைஞரின் 102-வது பிறந்த நாள் – செம்மொழி நாளாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (3ம் தேதி) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய நூல்கள் வெளியிடுதல், முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி அறிஞர்களுக்கு தகுதிச் சான்றிதழ்கள் வழங்குதல், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை – ஒப்பளிப்பு ஆணை வழங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர் வெளியிடுகிறார். முன்னதாக, கலைஞரின் 102வது பிறந்த நாள் – செம்மொழி நாளை முன்னிட்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு இன்று (3ம் தேதி) காலை 9.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.