தாம்பரம்: தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சேலையூர் காவல் நிலைய போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலையூர் சுற்றுவட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலையூர் பகுதியில் தனியார் பள்ளியின் அருகே பெட்டிக்கடை ஒன்றில் இளைஞர்கள் அடிக்கடி கூட்டமாக வந்து சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த பெட்டிக்கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது, தமிழ்நாடு அரசு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து மறைமுகமாக விற்பனை செய்தவரை கைது செய்து நடத்திய விசாரணையில், சேலையூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் பத்ரா (37). இவர், மாடம்பாக்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து, சிறு சிறு பொட்டங்களாக கட்டி, அதனை பெட்டிக்கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து 100 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார், கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் பத்ரா மீது வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.