திருமலை: ஆந்திராவில் தசராவை முன்னிட்டு நடந்த தடியடி திருவிழாவில் தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 100 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், மரக்கிளை முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் தேவரகட்டு கிராமத்தில் மலை மீது மாளம்மா மல்லேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தசராவையொட்டி அன்று தடிகளால் ஒருவரை ஒருவரை தாக்கி கொள்ளும் தடியடி திருவிழா நடைபெறும். தசரா தினத்தன்று நள்ளிரவில் சிலையை தங்கள் ஊருக்கு எடுத்து சென்று பூஜை செய்து மீண்டும் கோயிலில் ஒப்படைத்தால் நல்லது நடக்கும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை. அதனால், சாமி சிலையை கைப்பற்ற ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்வார்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தசரா பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் பாடலகட்டு, ரக்ஷபாதா, பசவன்னகுடி ஆகிய கிராமங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. இந்த வீதி உலாவின்போது சுவாமி சிலையை கைப்பற்ற மலையை ஒட்டிய 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரு குழுவாகவும், 5 கிராமங்களை சேர்ந்தவர்கள் மற்றொரு குழுவாகவும் பிரிந்து சுவாமி சிலையை கைப்பற்ற தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். திருவிழாவில் சுவாமி சிலையை அடைய ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் நூற்றுக்கணக்கானோர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பக்தி பாரம்பரியம் என்று கூறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் இந்த திருவிழாவால் ஒருபுறம் கோலாகலமாகவும், மறுபுறம் ரத்த களரியாகவும் காணப்பட்டது.
இந்த தடியடியில் மொத்தம் 100 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தேவரகட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த திருவிழாவை காண உள்ளூர்வாசிகள் சிலர் அருகே உள்ள மரங்களில் ஏறி நின்று பார்த்து கொண்டிருந்தனர். மரத்தில் அதிகமானோர் ஏறியதால் எடை தாங்காமல் மரக்கிளை முறிந்து கீழே விழுந்தது. இதில், ஆஸ்பரி கிராமத்தை சேர்ந்த கணேஷ் மற்றும் கம்மரச்சேடு பகுதியை சேர்ந்த ராமாஞ்சனேயுலு ஆகிய 2 பேர் இறந்தனர்.