செங்கல்பட்டு: நூறு நாள் வேலையில் பணி செய்த தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய கூலி தொகையினை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்த பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக கூலி வழங்கப்படாமல் உள்ளது. இதற்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய தொகை ரூ.2,696 கோடி வழங்கப்படாமல் உள்ளது. இதனால், பணியாளர்கள் பண்டிகை நாட்கள் வரும் நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒன்றிய அரசு வழங்க வேண்டிய தொகை ரூ.2,696 கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும். செய்த வேலைக்கு கூலி கொடுக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு பல ஆயிரம் கோடியை வாரி வழங்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், கூலி கொடுக்காத நவீன பண்ணையார் ஆட்சியின் கொடுமைக்கு எதிராகவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உடனடியாக சம்பள பாக்கியை வழங்கிட வலியுறுத்தியும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒப்பாரி போராட்டம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சோத்துப்பாக்கம், கீழ்மருவத்தூர், அகரம், கள்ளபிரான்புரம், வள்ளுவப்பாக்கம், மூசிவாக்கம், கொளம்பாக்கம், பழையனூர், அம்மனம்பாக்கம், கருநிலம், கயநல்லூர், சித்திரக்கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்தது. இப்போராட்டத்தில் விவசாயி தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.