பாடாலூர், ஜூலை 28: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தைச் சேர்ந்த நூறு நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் இன்றைய பணிக்கான வருகைப் பதிவேடு வரவில்லை எனக்கூறி பணி வழங்க மறுத்து பணித் தள பொறுப்பாளர் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.இதுபோல இரூர் கிராம மக்களுக்கு அடிக்கடி நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் பணி வழங்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து இரூர் கிராம மக்கள் நேற்று காலை ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பூங்கொடி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு இரூர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.