புழல்: விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்ட பெண் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார். சென்னை அருகே புழல் ஒன்றியம், விளாங்காடுப்பாக்கம் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் தலைமையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 100 நாட்கள் வேலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று முன்தினம் மாலை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அங்கு வேலைபார்த்த பெண் தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம், வரும் செப்டம்பர் 15ம் தேதி தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் மகளிர் உரிமை திட்டம் குறித்து மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ விளக்கி பேசினார்.
பின்னர், ஊராட்சி சார்பில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட தோட்டத்தில் பராமரித்து வரும் புங்கை, பூவரசன், கொய்யா, மா, வேப்பிலை உள்பட 200க்கும் மேற்பட்ட மூலிகை மரங்களை பார்வையிட்டு, அதன் பராமரிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, அங்கு 100 நாள் பணியில் இருந்த 250 பெண் தொழிலாளர்களுக்கு அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில், புழல் ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், புழல் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சித்ரா பெர்னாண்டோ, பொற்செல்வி, சென்னை வடகிழக்கு திமுக நெசவாளர் அணி மாவட்ட தலைவர் பாஸ்கரன், ஒன்றிய அவைத்தலைவர் செல்வமணி, ஊராட்சி துணைத் தலைவர் கலாவதி நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.