கான் யூனிஸ்: காசாவின் ஷிபா மருத்துவமனையில் சிக்கியிருந்த நோயாளிகள், ஊழியர்கள் உட்பட 1000 பேரும் வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான உத்தரவை தாங்கள் பிறப்பிக்கவில்லை என இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையேயான போர் 7வது வாரமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் இரு படைகளும் பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச போர் விதிகளை மீறி பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே வடக்கு காசாவில் உள்ள மிகப்பெரிய ஷிபா மருத்துவமனையை சுற்றிவளைத்த இஸ்ரேல் ராணுவம், அம்மருத்துவமனை ஹமாசின் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கும் இடம் எனவும், மருத்துவமனையின் அடியில் பதுங்குமிடம் அமைத்து ஹமாஸ் அமைப்பு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியது.
அதோடு மருத்துவமனைக்குள் சென்றும் சோதனை நடத்தியது. இந்நிலையில், மருத்துவமனையில் சிக்கியிருக்கும் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஊழியர்கள் வெளியேற நேற்று இஸ்ரேல் ராணுவத்திடம் இருந்து உத்தரவு வந்ததாக மருத்துவமனை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில், குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. ஆனால் நோயாளிகள் வெளியேற வேண்டுமென எந்த உத்தரவையும் தாங்கள் பிறப்பிக்கவில்லை என இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது.
இதற்கிடையே, வடக்கு காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐநாவால் இயங்கும் அல்-பக்கோரா பள்ளி மீது நேற்று இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தின. இதில் 50 பேர் பலியாகி உள்ளனர். தெற்கு காசாவின் கான்யூனிசில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 28 பேர் இறந்துள்ளனர். இதுவரை இப்போரில் காசாவில் 11,400 பேர் பலியாகி உள்ளனர்.
காயமடைந்த சிறுவர்கள் யுஏஇக்கு வந்தடைந்தனர்
காசா போரில் படுகாயமடைந்த சிறுவர்களின் முதல் குழு எகிப்தில் இருந்து விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு நேற்று வந்தடைந்தனர். இதில் காயமடைந்த சிறுவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என 15 பேர் கொண்ட குழுவினர் அபுதாபி வந்தனர். சில சிறுவர்கள் கை, கால்களில் கட்டுபோட்டிருந்தனர். அவர்களை ஸ்ட்ரச்சரில் படுக்க வைத்து அழைத்து வர விமானத்தில் இருக்கைகள் சில நீக்கப்பட்டு பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டிருந்தன. விமானத்தில் வந்த அனைவருமே கலங்கிய கண்களுடன் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர்.