99. ஸித்தயே நமஹ
(Siddhaye namaha)
யசோதைக்கு முக்தி அளிக்க விரும்பினான் கண்ணன். ஆனால் அவளுக்கோ முக்தி என்றால் என்னவென்றே தெரியாது. அவளுக்கு எப்படி அளிப்பது எனச் சிந்தித்தான். “முக்தி கொடு!” என்றுகூட அவள் கேட்க வேண்டாம். ‘முக்தி’ என்ற வார்த்தையை ஒரு முறை அவள் உச்சரித்தால்கூட போதும், அவளுக்கு அதை அளித்துவிடலாம். ஆனாலும் அவள் கேட்பதாகத் தெரியவில்லையே! என்ன செய்வது எனச் சிந்தித்தபடி கண்ணன் அமர்ந்திருந்தான். அப்போது அங்கே வந்த யசோதை, “கண்ணா! படிக்காமல் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் வயது வரம்பில் உள்ள உன் நண்பர்கள் உயிரெழுத்து, மெய்யெழுத்து அனைத்தையும் கற்றுவிட்டார்கள். நீ இன்னும் ஒன்றும் தெரியாமலே இருக்கிறாயே!” என்றாள்.
“படிப்பதால் என்ன கிடைக்கும்?” என்று கேட்டான் கண்ணன்.
“ஞானம்!” என்றாள் யசோதை.
“ஞானத்தால் என்ன கிடைக்கும்?” என்று கேட்டான் கண்ணன்.
“திருமாலிடம் ஆழ்ந்த பக்தி சித்திக்கும்!” என்றாள்.
“பக்தியால் என்ன
கிட்டும்?” என்றான்.
“முக்தி!” என்றாள்.
மகிழ்ச்சியுடன், “இப்போதே அந்த முக்தியை உனக்குத் தரட்டுமா?”
என்று கேட்டான்.
“இப்போதே வைகுந்தம் சென்று விட்டால் உன் திருமணத்தைக் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டாமல் போய்விடுமே. உனது திருமணத்துக்கான ஏற்பாடுகளை நானே முன்னிருந்து செய்து, உன் திருமணத்தைக் கண்டு களித்து விட்டு முக்தி பெற்றால் போதும்!” என்றாள் யசோதை. சிலகாலம் கழிந்தது. மதுராவுக்குச் சென்ற கண்ணன் ஆய்ப்பாடிக்கு வரவேயில்லை. பதினாறாயிரத்து எட்டுப் பெண்களைக் கண்ணன் மணம் புரிந்தான். அதில் ஒரு திருமணத்தைக் கூட யசோதை காணவில்லை. தனது ஆசை நிறைவேறாமல் உயிர் நீத்தாள் யசோதை.ஆனால் அந்த நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற எண்ணினார் திருமால். பத்மாவதியை மணந்து கொள்வதற்காகத் திருமலையில் ஸ்ரீ நிவாசனாக அவதரிக்கையில், யசோதையை வகுளமாலிகை என்னும் பெண்ணாகப் பிறக்கச் செய்தார். ஸ்ரீ நிவாசனின் சார்பில் வகுளமாலிகையே பத்மாவதியின் தந்தையான ஆகாசராஜனிடம் சென்று பெண் கேட்டாள். தானே முன்னிருந்து ஸ்ரீ நிவாச கல்யாணத்தையும் நடத்தி வைத்தாள்.
“உனது திருமணத்துக்கான ஏற்பாடுகளை நானே முன்னிருந்து செய்து, உன் திருமணத்தைக் கண்டு களித்து விட்டு முக்தி பெற்றால் போதும்!” என்று கிருஷ்ணாவதாரத்தில் சொல்லி இருந்தாளல்லவா? இப்போது அது ஈடேறிய திருப்தியுடன் பூத உடலை நீத்து வைகுந்தத்தை அடைந்து அங்கே திருமாலுக்கு நித்ய கைங்கரியம் செய்யும் பேறு பெற்றாள்.அந்தமில் பேரின்பம் நிறைந்த திருநாடான வைகுந்தத்தை யசோதைக்கு அளித்தாரே திருமால், அதைப் பெறுவதற்கு யசோதை செய்த முயற்சி என்ன? முக்தி என்ற சொல்லை ஒரு முறை உச்சரித்ததே ஆகும். முக்தி அளிப்பதற்கு நம்மிடம் எந்தத் தகுதியையும் திருமால் எதிர்பார்ப்பதில்லை. வைகுந்தத்தை அடைய வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலே போதும், அதை அளித்து விடுகிறார்.
அந்த விருப்பத்தை அவரிடம் தெரிவித்து, “முக்தி கொடு!” என்று கேட்கும் அனைவருக்கும் முக்தி அளிக்கிறார் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம். அதே முக்தியைப் பெற வேண்டி பற்பல தவங்களையும், உபாசனைகளையும், அநுஷ்டானங்களையும் செய்பவர்கள் உண்டு. அவர்களுக்கும் திருமால் அருள்புரிகிறார். ஆனால் அவற்றையெல்லாம் செய்ய இயலாத நம் போன்றவர் மேலும் கருணை கொண்டு முக்தி அடைய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அந்த விருப்பத்தையே தகுதியாய்க்கொண்டு முக்தி அளிக்கிறார்.இப்படிச் சிறிய முயற்சி செய்வோருக்கும் பெரிய பலனாகத் தன்னையே தரும் திருமால், ‘ஸித்தி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 99-வது திருநாமம்.“ஸித்தயே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அடியவர்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் பன்மடங்கு பலன் கிட்டும்படி திருமால் அருள்புரிவார்.