நெல்லை : நெல்லை டவுன் நயினார்குளம் கரையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் அடியோடு சரிந்து, விழுந்தது.நெல்லை, டவுன் நயினார்குளத்தின் கீழ்பகுதியில் இருந்து தச்சநல்லூர் செல்லும் சாலையில் குளத்தின் கரையோரமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு, சிறுவர்களுக்கான பூங்காக்கள், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மத்தியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான புளியமரங்கள், நாவல்மரங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே நின்ற சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் இரண்டாக உடைந்து விழுந்தது. முறிந்த மரத்தின் ஒரு பகுதி அங்குள்ள சிறுவர் பூங்காவிலும், சாலையிலுமாக விழுந்தது. இதனால் சாலையோர பூங்காவில் இருந்த சிறுவர்கள் அமரும் இடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. மேலும் ஒரு பகுதி சாலையின் குறுக்கே விழுந்தால் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை அடைத்தவாறு இருந்தது.
இதனால் அங்கு போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டவர்கள் அந்த மரத்தின் சாலையில் விழுந்த பகுதிகளை மட்டும் வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்தில் போக்குவரத்து சீரானது. இந்த மரம் முறிந்து விழுந்தபோது அங்கு மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து எதுவும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் குளத்தின் கரையில் சாய்ந்து கிடக்கும் மரத்தினை முழுவதுமாக அகற்றவேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.