*விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவு
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் குளறுபடி, முறைகேட்டால் 3 வருடங்களாக சம்பளம் பெறாமல் பரிதவிக்கும் பெண். 10 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றசாட்டை முன் வைத்தார். அதற்கு நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர், விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நூறுநாள் வேலை செய்து வரும் தனக்கு தற்போது வரை 3 வருடங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறி பெண் மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த விக்னேஷ் மனைவி அனிதா அளித்த மனுவில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் தற்போது வரை 3 வருடங்களாக வேலை செய்து வருவதாகவும், இதுவரை தனக்கு வேலை செய்ததற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ஊராட்சி நிர்வாகம் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்துள்ளதாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை தவறுதலாக வேறு நபரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதை நிறுத்தம் செய்து அனிதாவின் வங்கி கணக்கில் தொகையை பெற உதவுமாறு மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மயிலாடுதுறையில் உள்ள தேசியமயமாக்கப்ட்ட வங்கிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆனாலும் இதுவரை தனது சம்பள பணம் கிடைக்காததால் வாரந்தோறும் மாவட்ட கலெக்டர்அலுவலகத்திற்கு தனது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு கணவருடன் வந்து 10 வாரமாக மனு அளித்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக தெரிவித்த அனிதா தனது சம்பள பணம் கண்ணன் பாவாடை என்பவர் பெயரில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் போய் கேட்டதற்கு 100 நாள் திட்ட பொறுப்பாளர்கள்; தனக்கு கமிஷன் கொடுத்துவிட்டு பணத்தை பெற்று செல்வதாகவும் பரபரப்பு குற்றசாட்டு தெரிவித்துள்ளார்.
குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துவிட்டு கூட்டம் முடிந்து வெளியே வந்த மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக நடவடிக்கை எடுக்க முறையிட்டார். உடனடியாக அனிதாவின் சம்பள பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். சம்பளம் கிடைக்கவில்லை என்றால் நாளை மீண்டும் வந்து தன்னை நேரில் சந்திக்குமாறு அனிதாவிடம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.