கோவை, நவ. 8: கோவை பெரியகடை வீதியில் புனித மைக்கேல் மேல்நிலை பள்ளி உள்ளது. இதன் வளாகத்தில், பெரியகடை வீதியை ஒட்டியவாறு, ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இது, 100 ஆண்டு பழமையானது. இதில் 25 கடைகள், பல் மருத்துவமனை, தனியார் செக்யூரிட்டி அலுவலகம் என பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.இந்த கட்டிடம், மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால், இவற்றை இடித்துஅகற்ற மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, இந்த வணிக வளாகத்தில் இருந்த கடைகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டன. இடிந்து விழும் தருவாயில் இருந்த இந்த வணிக வளாகத்தை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு பொறியாளர்கள் நேற்று காலை அதிரடியாக இடித்து அப்புறப்படுத்தினர். முன்னதாக, இக்கட்டிடத்தின் மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


