திருத்துறைப்பூண்டி, ஆக. 11: 100 நாள் வேலை நாட்களை ஆண்டுக்கு 200 நாளாக உயர்த்தி தர வேண்டும் என்று திருத்துறைப்பூண்டியில் நடந்த தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். எதிர்கால வேலை குறித்து மாநில பொதுசெயலாளர் பாஸ்கர் பேசினார். கூட்டத்தில் எம்எல்ஏ மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் ஞானமோகன், ராஜா, ஜெயராமன், பன்னீர்செல்வம், மற்றும் நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்கப்படும் வாய்ப்பு கிராம மக்களின் – குறிப்பாக உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உறுதி செய்து மேம்படுத்த உதவி வருகிறது. புலம் பெயர்ந்து செல்வதை தவிர்த்து வழி வழியாக வாழ்ந்து வரும் கிராமத்தில் வாழ்ந்திட ஆதாரமாக அமைந்துள்ளது.
இத்திட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்களை ஆண்டுக்கு 200 நாட்களாக உயரத்துவதும், தினசரி ரூ.600 குறைந்த பட்ச ஊதியமாக வழங்குவதும், உடல் உழைப்பு தொழிலாளர் குடும்பங்களின் கண்ணியமான வாழ்க்கை சூழலை உருவாக்கித் தரும் என்பதை இந்த கிராம சபா ஒன்றிய அரசின் கவனத்திற்கு தெரிவித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தில் பொருத்தமான திருத்தம் செய்து வேலை நாட்களையும், ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.