தஞ்சாவூர், மார்ச் 4: 100 நாள் பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள மூன்று மாத சம்பள நிலுவையை உடனே வழங்க வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட துணைச் செயலாளர் தாமரைச்செல்வி தலைமையில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கை நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு சட்டத்தின் கீழ்100 நாள் வேலை பார்த்த பணியாளர்களுக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்காமல் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் உடனடியாக தமிழக அரசும், ஒன்றிய அரசும் 100 நாள் சம்பள பாக்கியை வழங்கிட வேண்டும்.
100 நாள் வேலைக்கான நிதியை ஒன்றிய அரசு கூடுதலாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் தில்லைவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், மாவட்டத் தலைவர் பழனிச்சாமி ஆகியோரும் மற்றும் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சாமிநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.