தர்மபுரி, மே 28: ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சியை சேர்ந்த பெண்கள், 100 நாள் வேலை கேட்டு, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நல்லம்பள்ளி ஒன்றியம், ஏ.ஜெட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்த பெண்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.ஜெட்டி அள்ளி, ஏர்ரப்பட்டி, தகடூர், ஒட்டப்பட்டி, கொடியூர், செட்டியூர், செட்டியூர் அடுத்து காலனி, தேங்காமரத்துப்பட்டி ஆகிய கிராமங்ளில் வசித்து வருகறோம்.
எங்கள் ஊராட்சியில் கடந்த 4 மாதமாக 100 நாள் வேலை வழங்காததால் பொருளாதாரத்திற்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். கிராமங்களில் வசிக்கும் சுமார் 1000 குடும்பங்கள், விவசாய வேலை மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சார்ந்தே இருக்கிறோம். எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, 100 நாள் வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.