பெரம்பலூர்,ஜூன் 14: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், தழுதாழை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் கடந்த மாதம் தழுதாழை கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்துள்ளனர். அவர்களுக்கான ஊதியம் அவர்களின் வங்கிக் கணக்குக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்த 100நாள் வேலைத்திட்டப் பணியாளர்களான பொது மக்கள் ஒருநாள்ஊதியமாக ரூ.50க்கு குறைவாக வங்கியில் வரவாகியுள்ளதை அறிந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று (13ம் தேதி) காலை தழுதாழை கிராமத்தில் உள்ள அரும்பாவூர்- பெரம்பலூர் சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரும்பாவூர்- பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், பூங்கொடி, கிராம நிர்வாக அலுவலர் ரவி மற்றும் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வரும் காலங்களில் இதுபோன்று குறைந்த ஊதியம் இல்லாமல் சரியான ஊதியம் வரும் வகையில் நடவடிக்கை எடுக் கப்படும் என வளர்ச்சித்துறை அதிகாரி உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலைக் கை விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.