திருமயம்,ஆக.13: ஒன்றிய அரசின் விருது பெற்ற ஊராட்சி தலைவருக்கு கிராம மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்யும் பணியாளர்களை திறமையாக கையாண்டு ஊராட்சியில் உள்ள பெரும்பாலான பணிகளை ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்யும் பணியாளர்களைக் கொண்டு நிறைவு செய்து கொண்டார். மேலும் திருமயம் பகுதியில் நடைபெறும் விழாக்கள், நீர்நிலைகளை ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி செய்யும் பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்தல், நீர்நிலைகளை ஆழப்படுத்துவது, சாலையோரம் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்யும் புதர் செடிகளை அகற்றுவது உள்ளிட்ட பெரும்பாலான பணிகளை மேற்கொண்டு வந்தார். இதனால் ஊராட்சியின் பெரும் பகுதி சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சிறப்பாக பணி செய்தமைக்காக திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு எம்.ஜி.என்.ஆர் இ.ஜி.இ.எஸ் எக்ஸலென்சி அவார்ட் 24 (MGNREGES_EXCELLENCY_AWARD_2024) வழங்கப்பட்டது. இதனை கடந்த 7ம் தேதி மாலை டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஒன்றிய அமைச்சர் எஸ்.பி சிங் பாகேல் திருமயயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் நேற்று மதியம் திருமயம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் சிக்கந்தருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு திருமயம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.