புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையே அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தம் இறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத்தும் நேற்று முன்தினம் தொலைபேசியில் உரையாடினர். இதைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த ஆண்டில் ஹெக்சேத்-ராஜ்நாத் சிங் சந்திப்பின் போது, இந்தியா-அமெரிக்கா இடையே அடுத்த 10 ஆண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக் கொண்டுள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய ராணுவத்திற்கு தேவையான பல்வேறு போர் விமானங்கள், ஆயுதங்களை அமெரிக்காவிடம் வாங்கி வருகிறது. தெற்காசியாவில் அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக உள்ள இந்தியாவுடன் அமெரிக்கா போர் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஒத்துழைப்பை அடுத்த 10 ஆண்டுக்கும் தொடர ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. மேலும், இரு அமைச்சர்களும், இந்தியாவிற்கு நிலுவையில் உள்ள முக்கிய அமெரிக்க பாதுகாப்பு விற்பனைகள் குறித்தும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பின் கட்டாயம் குறித்தும் விவாதித்தாக பென்டகன் தெரிவித்துள்ளது. இந்தியா 5ம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான எப்414 ஜெட் இன்ஜிகளை கூட்டு முயற்சியில் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டுமென ராஜ்நாத் சிங், ஹெக்சேத்திடம் வலியுறுத்தி உள்ளார்.