*பட்டாசு வெடித்தும், டப்பாக்களை தட்டியும் விரட்டும் விவசாயிகள்
நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே புளியடி பகுதியில் 10 ஏக்கர் நெல் வயல்களை பறவைகள் சேதப்படுத்தி வருகின்றன. அவற்றை பட்டாசு வெடித்தும், டப்பாக்களை தட்டியும் விவசாயிகள் விரட்டி வருகின்றனர்.குமரி மாவட்டத்தில் குளத்துபாசன பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளன. கால்வாய் பாசனத்தை நம்பி நடவு செய்த இடங்களில் நெற்பயிர்கள் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு நெற்பயிர்கள் நடவு செய்துள்ள விவசாயிகள் பூச்சி தொல்லை, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். தற்போது பறவைகளால் புதிய பிரச்னையை சந்திக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக நாகர்கோவில் அருகே புளியடி நான்கு வழிச்சாலை அருகே கடுகுளம்பத்து இந்த பாதிப்பில் சிக்கியுள்ளது. இங்கு விவசாயிகள் நாற்றுநடவு செய்து பயிர் வளர்ந்து வருகிறது. அம்பை 16 ரக நெற்பயிரை இந்த பகுதி விவசாயிகள் இங்கு சாகுபடி செய்துள்ளனர். இங்கு கடந்த சில நாட்களாக மயில் போன்ற கோழிகள் பறந்து வந்து நெற்பயிர்களை சூழ்ந்துகொண்டு பயிர்களை அழித்து வருகின்றன. சுமார் 10 ஏக்கர் நெற்பயிர்கள் தற்போது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக அந்த பகுதி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:
நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை சூழ்ந்துகொள்ளும் பறவைகள் கொத்து கொத்தாக நாற்றுகளை கொத்தி இழுத்து கீழே தள்ளுகிறது. பின்னர் அவற்றை உண்டு சேதப்படுத்துகிறது. பறவைகளை விரட்ட பட்டாசு வெடித்தும், தகர டப்பாக்களை கொட்டி சப்தம் எழுப்பியும் விரட்டி வருகின்றோம். அவ்வாறு விரட்டப்படும் பறவைகளை புத்தேரி குளம் பகுதியில் தஞ்சமடைகின்றன. மீண்டும் பறவைகள் பயிர்களை வந்து சேதப்படுத்துகின்றன. இந்த பறவைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.