திருவண்ணாமலை, ஆக.22: திருவண்ணாமலை மாவட்டத்தில் 10.20 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க நாளை சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது: தேசிய குடற்புழு நீக்க நாளாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 23ம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, தேசிய குடற்புழு நீக்க தினமாக நாளை (23ம் தேதி) 1 வயது முதல் முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட உள்ளது. மேலும், நாளை நடைபெறும் முகாம்களில் மாத்திரை வழங்ககாமல் விடுபடும் நபர்களுக்கு, வரும் 30ம் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 மிகி கொண்ட அல்பெண்ட்சோல் மாத்திரையும், 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 400 மி.கி கொண்ட அல்பெண்ட்சோல் மாத்திரை வழங்கப்படும். அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், குடற்புழு நீக்க (அல்பெண்டசோல்) மாத்திரை இலவசமாக வழங்கப்பட உள்ளது. அதன் மூலம், குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட 7,32,172 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 2,87,998 பெண்களுக்கும் உள்பட மொத்தம் 10.20 லட்சம் பேருக்கு, கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களால் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. குடற் புழுத் தொற்றினால், ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, திறந்த வெளியில் மலம் கழித்தல் கூடாது, கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். காலணிகளை அணிதல் அவசியம். நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவுக்கு முன், கழிவறையினை பயன்படுத்திய பின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது அவசியம்.
சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவை உட்கொள்ளுதல், சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். குடற்புழு நீக்கத்தினால், குழந்தைகளுக்கு ரத்த சோகையை தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது, குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்கு வருவது அதிகரிக்கிறது. குடற்புழு மாத்திரைகள் வழங்கும் பணியில், பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள், சமூக நலத்துறை, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊட்டச்சத்துத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, குடற்புழு மாத்திரைகளை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.