திருச்சி, மே 17: தமிழகத்தில் 2024-2025ம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை பொதுத்தேர்வு கடந்த மார்ச் – ஏப்ரல் 2025 மாதங்களில் நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று இடைநிலை பொது தேர்விற்கான தேர்வு முடிவுகள் வௌியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 445 பள்ளிகளில் பயின்ற 16,973 மாணவர்களும், 16,572 மாணவிகளும் என மொத்தம் 33,545 மாணவ,மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 16,123 மாணவர்களம், 16,283 மாணவிகளும் என மொத்தம் 32,409 மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.99 சதவீதம் மாணவர்களும், 98.27 சதவீதம் மாணவிகளும் என மொத்தம் 96.61 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 1.38 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் 93.80 சதவீதம் பெற்று தரவரிசையில் 5ம் இடத்தை திருச்சி மாவட்டம் பிடித்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 92 பள்ளிகளும், அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 28 பள்ளிகளும், ஆங்கிலோ இந்தியன் பள்ளி 1ம், தனியார் பள்ளிகள் 89ம் என மொத்தம் 210 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்துள்ளனர். அதேபோல் மேல்நிலை முதலாம் ஆண்டு (11ம் வகுப்பு) தேர்வு முடிவுகளும் நேற்று வௌியானது. அதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 259 பள்ளிகளில் பயின்ற 15050 மாணவர்களும், 16599 மாணவிகளும் என மொத்தம் 31649 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 13252 மாணவர்களும், 15964 மாணவிகளும் என மொத்தம் 29216 மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவ்ட அளவில் 92.31 சதவீத தேர்ச்சியும், மாநில அளவில் 92.09 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. அதேபோல் அரசுப்பள்ளிகளில் 8 பள்ளிகளும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 14 பள்ளிகளும், தனியார் பள்ளிகளில் 36 பள்ளிகளும் என மொத்தம் 58 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
சிறையில் கைதிகள் அசத்தல் பாஸ்
திருச்சி மத்திய ஆண்கள் சிறையில் 10ம் தேர்வு எழுதிய 19 பேரில் 18 பேர் தேர்ச்சி பெற்றனர். இதேபோல 11ம் வகுப்பு தேர்வில் தேர்வெழுதிய 15 பேரில் 12 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் சிறையில் 11ம் வகுப்பு தேர்வெழுதிய 4 பேரில் 3 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.