செங்கல்பட்டு, ஜூன் 20: செங்கல்பட்டு அருகே 10 மணி நேர மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். செங்கல்பட்டு அடுத்த மேலமையூர், ஆலப்பாக்கம், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7மணிக்கு தடைசெய்யப்பட்ட மின்சாரம் நேற்று விடியற்காலை 5 மணி வரை 10 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில், பொதுவாக திடீரென மின் வினியோகம் தடை ஏற்பட்டால் எதற்காக தடைசெய்யப்பட்டது, என்ன காரணம் டிரான்ஸ்பார்மர் பழுதா அல்லது வேறேதும் காரணமா என மின்வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் பொதுமக்கள் கேட்டு தெரிந்து கொள்வது வழக்கம். அதற்காகத்தான் அலுவலக எண்ணை மின்வாரிய அட்டையில் பதிவிடப்படுகிறது.
அதற்காக ஒருநபரை இரவு பகல் என 24 மணி நேரமும் பணியமர்த்தபட்டுள்ளது. ஆனால் அந்த அலைபேசி ரிசீவரை எடுத்து கீழே வைத்துவிட்டு உறங்கிவிடுகிறார்கள். அதனால் அந்த அலைபேசியை தொடர்பு கொண்டால் எந்நேரமும் பிசியாகவே இருக்கும். அந்த நபர் அலைபேசி தொந்தரவு இல்லாமல் தூங்கிவிடுகிறார். மின்தடைக்கான காரணம் குறித்து அந்தந்த பகுதிக்கு வரும் மின் பழுதுபார்க்கும் ஊழியரை தொடர்பு கொண்டால் நான் தற்போது டியூட்டியில் இல்லை என்று சிலரும் சிலர் அலைபேசியை எடுப்பதேயில்லை.
இறுதியாக இதற்கெல்லாம் பொறுப்பேற்கிற அதிகாரி சம்மந்தப்பட்ட உதவி பொறியாளரை தொடர்பு கொண்டால் அவர் மற்றவர்களை விட ஒருபடி மேலேபோய் யார் அலைபேசியில் தொடர்பு கொண்டாலும் பிஸியாகவே இருப்பது போல பிஸிடோனை ரிங் டோனாக வைத்து பொதுமக்களை ஏமாற்றுகிறார். பொதுமக்கள் தங்களது பகுதியில் மின்தடை ஏற்பட்டால் யாரைத்தான் கேட்டு தெரிந்து கொள்வது என பொதுமக்கள் திணறி வருகிறார்கள். கடந்த சில தினங்களாகவே செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மின்தடை ஏற்ப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றமுன்தினமும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. டிரான்ஸ்பாமில் ஏதும் பிரச்சினை என்றால் அந்த சமயத்தில் தற்காலிக தீர்வு காண்கிறார்களே ஒழிய அதற்கு நிரந்தர தீர்வு காண்பதில்லை. தற்போதுள்ள உதவி பொறியாளர் முறையாக பணிக்கு வருவதில்லை. எந்தெந்த பகுதியில் மின்சாரம் பாதிக்கபடுகிறது.
என்னென்ன பிரச்னை என கண்காணிப்பதில்லை. முறையாக ஊழியர்களை வேலை வாங்குவதில்லை. செங்கல்பட்டு மின்வாரியம்மக்கள் சேவைக்காக செயல்படவில்லை. இரவு முழுவதும் சாலையிலும் மொட்டை மாடியிலும் கொசுக்கடியில் பொதுமக்கள் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தடைசெய்யப்பட்ட மின்சாரம் அதிகாலை 5 மணிக்கு வந்து அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் தடைசெய்யப்பட்டு விட்டது. இதற்கெல்லாம் முடிவுதான் என்ன? இனியும் இந்த நிலை தொடர்ந்தால் செங்கல்பட்டு மின்வாரிய உதவி பொறியாளரை கண்டித்து பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.