மேட்டூர், மே 30: மேட்டூர் அனல்மின் நிலையம் எதிரே, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கருமலைக்கூடல் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்ஐ சபாபதி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பைகளுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில், அனல் மின்நிலையம் நுழைவாயில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.
அவரை சுற்றி வளைத்து பிடித்து, போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ஒடிசா மாநிலம் பாலன்கீர் மாவட்டம், மதியப்பள்ளியைச் சேர்ந்த சந்திரசேகர் ராணா மகன் நரோட்டம் ராணா(35) என்பது தெரியவந்தது. அவர் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து, மேட்டூர் அனல் மின் நிலையம் பகுதியில் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் வைத்திருந்த 10 கிலோ 140 கிராம் கஞ்சாவை கைப்பற்றி, மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.