வேலூர், ஆக. 14: தமிழ்நாடு முழுவதும் 10 ஆண்டுகளில் மாநகராட்சிகளின் வரவு- செலவு என்ன? என்று விரிவான அறிக்கை நகராட்சி நிர்வாகம் கேட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, உட்பட தற்போது புதிதாக சேர்க்கப்பட்ட மாநகராட்சிகள் என்று மொத்தமாக 25 மாநகராட்சிகள் உள்ளது. இதில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சிகளை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் அந்த மாநகராட்சிகளுக்கு தேவையான செலவினங்களையும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, மாநகராட்சி இடங்களில் வணிகவளாகங்கள் கட்டப்பட்டு வாடகை விடப்பட்டு அதில் இருந்து பல லட்சங்கள் வரை அந்தந்த மாநகராட்சிகளுக்கு வருவாய் கிடைக்கிறது.
அதேசமயம், ஒன்றிய மாநில அரசுகளின் நிதி, உலக வங்கி நிதி என்று பல்வேறு நிதிகள் பெற்று மாநகராட்சிகளில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், கடந்த 10 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் வரவு எத்தனை கோடி, செலவு அதனைவிட அதிகமாக உள்ளதா? மாநகராட்சி வருவாய் மூலம் செலவிடப்பட்டது எவ்வளவு, ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி பெற்று மேற்ெகாண்ட வளர்ச்சி பணிகள் என்ன? என்று விரிவான அறிக்கை அளிக்க நகராட்சி நிர்வாகம் மூலம் அந்தந்த மாநகராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலுடன் மாநகராட்சி அதிகாரிகள் சென்னையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்று இந்த விவரங்களை வழங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மாநகராட்சிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒன்றிய, மாநில அரசு நிதி கேட்பதற்காக, அந்தந்த மாநகராட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் வரவு-செலவு என்ன என்று கேட்கப்பட்டுள்ளது’ என்றனர்.