*தாய் கண்ணெதிரே சோகம்
பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் அருகே அண்ணனை வழியனுப்ப தாயுடன் வந்த ஒரு வயது குழந்தை, பள்ளி வேன் டயரில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள சௌதாபுரம் கொல்லப்பட்டி குடித்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நூற்பு ஆலையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அபிநயா. இவர்களுக்கு விசாகன்(4), வெற்றிவேல்(1) என 2 குழந்தைகள்.
விசாகன் இங்குள்ள தனியார் பள்ளியில் யூகேஜி வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை 8 மணியளவில், பள்ளி வேன் வீட்டின் முன்பு வந்து நின்றுள்ளது. விசாகனை பள்ளி வேனில் அபிநயா ஏற்றி விட்டுள்ளார். குழந்தை ஏறியதும், டிரைவர் செல்வராஜ் வேனை நகர்த்தியுள்ளார். அப்போது அபிநயாவுடன் நின்றிருந்த குழந்தை வெற்றிவேல், வேன் பின்புற சக்கரத்தினுள் எதிர்பாராத விதமாக விழுந்தான். சக்கரம் தலையில் ஏறியதில் நசுங்கி, கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தை துடிதுடித்து உயிரிழந்தது.
இதை பார்த்த அபிநயா மற்றும் அங்கிருந்தவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெப்படை போலீசார், கவனக்குறைவாக வேனை இயக்கிய டிரைவர் செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் கண்ணெதிரே ஒரு வயது குழந்தை டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.